அதிமுக வாக்குகளும் சிதறுது... விஜய்க்கு ஆதரவாக தென்மாவட்டங்களில் ராமராஜன் பிரச்சாரம்!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் களத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு ஆதரவாக, முன்னணி நடிகர் ராமராஜன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் பிரசாரத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அவர் செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள் கடலெனத் திரண்டு வருகின்றனர். இந்தச் சூழலில், விஜய்யின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நடிகர் ராமராஜன் பிரசாரக் களத்தில் குதிக்க உள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) நட்சத்திரப் பேச்சாளராகவும், தீவிர ஆதரவாளராகவும் இருந்தவர் ராமராஜன். தற்போது அவர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட முடிவெடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் ராமராஜனுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, அங்குள்ள வாக்குகளைத் தவெக பக்கம் இழுக்கத் தேர்தல் வியூகக் குழு திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக, தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் தொகுதியில் ராமராஜன் தனது பிரசாரத்தைத் தொடங்க உள்ளார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள முக்கியத் தொகுதிகளிலும் அவர் தவெக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய்யின் உருவ பொம்மைகளை வைத்துத் தொண்டர்கள் பிரசாரம் செய்து வரும் நிலையில், நேரடி நட்சத்திரப் பேச்சாளராக ராமராஜன் வருவது தவெக-வினருக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளளது.

ராமராஜனின் வருகை குறித்த செய்தியை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் 'ட்ரெண்ட்' செய்து வருகின்றனர். "கிராமத்து நாயகன்" மற்றும் "இன்றைய இளைய தலைமுறையின் நாயகன்" இணைந்திருப்பது வெற்றிக்கு வழிவகுக்கும் என அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ராமராஜனின் வருகை, தென் மாவட்டங்களில் உள்ள அதிமுக மற்றும் திமுக-வின் வாக்கு வங்கியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.