மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் 57% நிறைவு.. ஜன.1 புத்தாண்டு முதல் ஓபி பிரிவு இயங்கும்!

 

மதுரை தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 57 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், வரும் ஜனவரி 1 முதல் புறநோயாளிகள் பிரிவு முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு நீண்ட காலமாகத் தாமதமாகி வருவதால், கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தக் கோரி மதுரையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒட்டுமொத்தக் கட்டுமானப் பணிகளில் 57 சதவீதம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாகத் தங்கிப் பயின்று வந்த எம்பிபிஎஸ் மாணவர்களின் 5 பேட்ச்களும் தற்போது தோப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சொந்த வளாகத்திற்குக் முழுமையாக மாற்றப்பட்டுள்ளனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையான புறநோயாளிகள் பிரிவு வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் செயல்படத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை முடித்து வைத்துள்ளது.