கடலில் விழுந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானம்! 6 பேர் பரிதாப பலி!

 

 

பெர்முடாவில் இருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.வட அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள பெர்முடா தீவில் இருந்து அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகருக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் ஏர் ஆம்புலன்ஸ் சேவையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

allowfullscreen

கல்ப்ஸ்ட்ரீம் ஜி100 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் 6 பேர் பயணம் செய்தனர். பெர்முடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், அமெரிக்காவின் நன்டக்கெட் தீவு அருகே பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது.  

இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல்படை உள்ளிட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். தொடர்ந்து தேடுதல் நடைபெற்ற நிலையில், விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

விமானத்தின் சிதைந்த பாகங்கள் கடலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. அதில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களின் உடல்கள் இதுவரை மீட்கப்படவில்லை.இந்த விமானத்தில் 4 கனடா நாட்டினரும், பெர்முடாவைச் சேர்ந்த 2 பேரும் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்