டெல்லி விமான நிலையத்தில் பலத்த காற்று...  விமானங்கள் மீது உபகரணங்கள் மோதி சேதம்!

 

டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்த மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்தின் தரைப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு கனரக உபகரணங்கள் நிலைதடுமாறி நகர்ந்துள்ளன. அவ்வாறு நகர்ந்த தரை ஆதரவு உபகரணங்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் மீது பலமாக மோதியதில் மூன்று விமானங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்த விபத்தானது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 2 இல் நிகழ்ந்துள்ளதாக விமான நிலைய நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான மூன்று குறுகிய உடல் விமானங்கள் இந்த மோதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அசம்பாவித சம்பவத்தைத் தொடர்ந்து சேதமடைந்த அந்த மூன்று விமானங்களும் உடனடியாகச் சேவையில் இருந்து நீக்கப்பட்டுப் பழுதுபார்க்கும் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

விமான நிலைய தரைப்பகுதியில் இருந்த ஏர் இந்தியா இன்ஜினியரிங் மற்றும் இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான உபகரணங்களே பலத்த காற்றினால் இடம்பெயர்ந்து மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் வானிலை மாற்றம் மற்றும் புயல் காற்று குறித்து வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் தங்களுக்கு எவ்வித முன்னெச்சரிக்கையும் அளிக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.