5ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாடல்... பெரும் சர்ச்சை!

 

ஒடிசா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்காக அண்மையில் புதிய அரசுப் பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதில் 5-ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 1999-இல் வெளியான 'ஹம் தில் தே சுகே சனம்' என்ற இந்தித் திரைப்படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநில நாட்டுப்புறப் பாடலான 'நிம்புடா நிம்புடா' என்ற அந்தத் திரைப்படப் பாடல், புத்தகத்தில் அப்படியே அச்சிடப்பட்டிருப்பது கல்வித் துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்கள் படிக்கும் புத்தகத்தில் சினிமா பாடல் எப்படி அச்சிடப்பட்டது என்று கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். இதுமட்டுமின்றி, ஒடிசா மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் பாடப்புத்தகங்களில் மொத்தம் 1600-க்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 8-ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் மட்டும் அதிகபட்சமாக 705 பிழைகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, தவறுகள் உள்ள பாடப்புத்தகங்கள் அனைத்தும் முழுமையாகத் திருத்தப்பட்டுப் பின்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அம்மாநிலப் பள்ளி கல்வித்துறை மந்திரி நித்யானந்த கோண்ட் தெரிவித்துள்ளார். மேலும், சினிமா பாடல் அச்சிடப்பட்டது மற்றும் பிற தவறுகள் குறித்து முழுமையாக விசாரிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.