undefined

அஜித்குமார் மரண வழக்கு - டிஎஸ்பி சண்முகசுந்தரத்துக்கு பிடிவாரன்ட்.. இன்று ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

 

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார், காவல்துறை விசாரணையின்போது தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், தற்போது முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே தனிப்படையைச் சேர்ந்த 6 காவலர்கள் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் சில உயர் அதிகாரிகள் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

அதன்படி மானாமதுரை முன்னாள் டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா என கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட 4 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது ஆய்வாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட மூவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் டிஎஸ்பி சண்முகசுந்தரம் ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டிஎஸ்பி சண்முகசுந்தரத்துக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதி அசன் அலி, அவரைக் கைது செய்து இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிபிஐ-க்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

முன்னதாக சண்முகசுந்தரம் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுக்கள் இருமுறை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. காவல் மரண வழக்கில் டிஎஸ்பி அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.