2031-ல் அஜித் தான் முதலமைச்சர்.. முழு உருவ சிலைக்கு பாலபிஷேகம் செய்து ரசிகர்கள் சபதம்!

 

நடிகர் அஜித் குமார் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி, சென்னை கோவூர் பகுதியில் அவரது முழு உருவச் சிலையைத் திறந்து ரசிகர்கள் பாலபிஷேகம் செய்த சம்பவம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித்தின் பெயரில் 'அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கியுள்ள ரசிகர்கள், வரும் 2031-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அஜித்தை முதலமைச்சராக்குவதே தங்களது முக்கிய லட்சியம் எனச் சூளுரைத்துள்ளனர்.

சென்னை கோவூரில் அமைக்கப்பட்டுள்ள அஜித்தின் முழு உருவச் சிலையைத் திறந்து வைத்த ரசிகர்கள், அச்சிலைக்குப் பாலாபிஷேகம் செய்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். மேலும், அவருக்கு விரைவில் தனியாகக் கோவில் கட்டவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நடிகர் அஜித் ஏற்கனவே தனது அதிகாரப்பூர்வ நற்பணி மன்றங்களைக் கலைத்துவிட்டு, "எனக்கு அரசியலில் எவ்வித விருப்பமும் இல்லை; எனது ரசிகர்களைக் கொண்டு அரசியல் ஆதாயம் தேட விரும்பவில்லை" எனப் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும், அவரது சம்மதமின்றி ரசிகர்கள் அமைப்புகளைத் தொடங்கி சிலை வைப்பதும், 2031-ல் முதல்வர் என முழக்கமிடுவதும் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் களம் சார்ந்த விவாதங்களிலும் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.