அகிலேஷ் யாதவின் ரோடு ஷோவில் விபரீதம்... புல்டோசர் மோதி பாஜக நிர்வாகி மகன் பலி!
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் ரோடு ஷோவின்போது, புல்டோசர் மோதி பாஜக நிர்வாகியின் 10-ம் வகுப்பு படிக்கும் மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், கோரக்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமாஜ்வாதி கட்சி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அவர் ரோடு ஷோவாக சென்றார்.
அப்போது அகிலேஷ் யாதவுக்கு பிரமாண்ட மாலை அணிவித்து வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக புல்டோசர் கொண்டுவரப்பட்டு, அதன் உதவியுடன் அவருக்கு பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.
புல்டோசர் மோதி மாணவன் பலி
நிகழ்ச்சி முடிந்து ரோடு ஷோ நிறைவடைந்த பின்னர், புல்டோசர் சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையில் நடந்து சென்ற 10-ம் வகுப்பு மாணவன் ஆர்யவர்தன் மீது புல்டோசர் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி மாணவன் உயிரிழந்தார்.
5 பேர் கைது
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த மாணவன் கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஓம்கர் சிங்கின் மகன் என்பது தெரியவந்தது.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், புல்டோசர் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அகிலேஷ் யாதவின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சமாஜ்வாதி கட்சி நிர்வாகி சாது உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.