அட்சய திருதியை தங்கம் வாங்க 'பக்கா' நேரம் இதுதான் - செல்வம் கொழிக்க எப்போது நகை வாங்கலாம்?!
இந்த ஆண்டு, செல்வம் பெருகும் நன்னாளான அட்சய திருதியை இன்று ஏப்ரல் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
'அட்சயம்' என்றால் குறையாதது என்று பொருள். இந்த நாளில் தொடங்கும் காரியங்கள் மற்றும் வாங்கும் மங்களப் பொருட்கள் பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். குறிப்பாக, தங்கம் வாங்குவது அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதால், மக்கள் நகைக்கடைகளுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர்.
இந்த ஆண்டு திருதியை திதியானது இன்று ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை காலை 10:49 மணிக்குத் தொடங்கி, நாளை ஏப்ரல் 20, திங்கள்கிழமை காலை 07:27 மணி வரை நீடிக்கிறது. இதன்படி தங்கம் வாங்க மிகச் சிறந்த நேரங்களாக இன்று ஏப்ரல் 19 (ஞாயிறு): காலை 10:49 மணி முதல் நள்ளிரவு வரை எப்போது வேண்டுமானாலும் தங்கம் வாங்கலாம். அதே போன்று இன்று காலை 10:49 மணி முதல் பகல் 12:08 மணி வரை வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது.
தங்கம் மட்டுமா? வேறு என்ன வாங்கலாம்?
தங்கம் வாங்க முடியாதவர்கள் மன வருத்தம் அடையத் தேவையில்லை. மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் கல் உப்பு, மஞ்சள் தூள், வெண்கல மணி அல்லது புதிய நாணயங்கள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்கு இணையான பலன் கிடைக்கும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த நன்னாளில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வதும், ஆடை தானம் வழங்குவதும் புண்ணியத்தைத் தேடித்தரும். இந்த அட்சய திருதியை உங்கள் இல்லத்தில் வற்றாத செல்வத்தை அள்ளித் தரட்டும்!