உஷார்... நாளை முதல் அமலுக்கு வரும் 7 முக்கிய மாற்றங்கள்... சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு கட்டணம் வரை அத்தனையும் மாறுது!

 

2026 வருடத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் நாளை துவங்க உள்ள நிலையில், நாளை டிசம்பர் 1ம் தேதி முதல் சாமானிய மக்களின் குடும்ப பட்ஜெட், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு முக்கிய மாற்றங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம், எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு கூடுதல் கட்டணம், ஆதார் இலவச அப்டேட் மற்றும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மறுஆய்வு உள்ளிட்ட முக்கிய விவரங்களைப் பார்ப்போம். 

அரசு எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கும் வழக்கப்படி, டிசம்பர் 1-ஆம் தேதி வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள் அறிவிக்கப்பட உள்ளன. வணிக சிலிண்டர் விலை மாற்றம் உணவகங்களையும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை குடும்ப பட்ஜெட்டையும் நேரடியாகப் பாதிக்கும். அத்துடன் விமான எரிபொருளுக்கான புதிய விலைகளும் வெளியிடப்படும். 

டிசம்பர் 1 முதல் எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஒரே பரிவர்த்தனையில் ரூ.30,000-க்கு மேல் போக்குவரத்து தொடர்பான கட்டணம் செலுத்தினால், வரிகளுடன் 1% கட்டணம் விதிக்கப்படும். மேலும், ஒரு பில்லிங் சுழற்சியில் மொத்த எரிபொருள் செலவு ரூ.50,000-ஐ தாண்டினால், முழு எரிபொருள் செலவிற்கும் 1% கட்டணம் வசூலிக்கப்படும் (உதாரணமாக ரூ.60,000 செலவிற்கு ரூ.600 கட்டணம்). 

அதிகாரப்பூர்வ ஆதார் மொபைல் செயலி மூலம் மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்கவோ அல்லது புதுப்பிக்கவோ வசூலிக்கப்பட்டு வந்த ரூ.75 கட்டணத்தை UIDAI தள்ளுபடி செய்துள்ளது. மொபைல் செயலி வழியாக மேற்கொள்ளப்படும் இ-மெயில் அப்டேட்களுக்கு மட்டுமே பொருந்தும் இந்த சலுகை டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும்.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் தடையின்றி பென்ஷன் பெற நவம்பர் 30-க்குள் வாழ்நாள் சான்றிதழை (Life Certificate) சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் டிசம்பர் மாத ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு  கூட்டம் டிசம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அக்டோபர் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகித மாற்றங்கள் தெரியவரும். 

நிதி நடவடிக்கை பணிக்குழுவின் தரநிலைகளுக்கு இணங்கும் நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் OCI அட்டைதாரர்கள், இந்தியா வராமலேயே தங்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் KYC நடைமுறைகளை முடித்து இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வசதி டிசம்பர் 3-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

கமாடிட்டி டெரிவேட்டிவ்ஸ் சந்தையில் வர்த்தகம் செய்வோருக்கு டிசம்பர் 1 முதல் திருத்தப்பட்ட மார்ஜின் விதிகள் அமலுக்கு வருகின்றன. விலை ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து வர்த்தகர்கள் 6%, 8% அல்லது 10% ஆரம்ப மார்ஜினைப் பராமரிக்க வேண்டும் எனவும், இடர் பகுப்பாய்விற்கு 2 முதல் 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.