உஷார்... அமலுக்கு வந்தது... அபராதம் ரூ.1,000 ஆக உயர்வு - ரயில்வே துறையின் அதிரடி நடவடிக்கை!!

 

ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பை போடுபவர்களுக்கான அபராதத் தொகையை ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி இந்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் தூய்மையைப் பேணிக்காக்கும் நோக்கத்துடன், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ரூ.500 அபராதத் தொகையை ரூ.1,000 ஆக உயர்த்தி கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதியிட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரயில்களில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தாலும், தின்பண்ட கவர்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை இருக்கைகளுக்கு அடியில் போடுவது அல்லது ஜன்னல் வழியே வெளியே வீசுவது போன்ற செயல்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம்ரூத் பாரத் போன்ற திட்டங்களின் கீழ் ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வரும் சூழலில், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ரயில்வே வளாகங்களில் சமைத்தல், குளித்தல், எச்சில் துப்புதல் மற்றும் திறந்தவெளியில் சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் கடுமையான விதிகள் பின்பற்றப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

விதிக்கப்படும் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறுவோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படுவர். மேலும், ரயில் பெட்டிகளிலும் ரயில்வே சொத்துகளிலும் சுவரொட்டிகள் ஒட்டுவது, சுவர்களில் எழுதுவது அல்லது ஓவியங்கள் வரைவது போன்ற செயல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.