உஷார்.. தரமற்ற மருந்துகளை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை.. உரிமத்தை ரத்து செய்யப் புதிய விதிமுறைகள்!

 

இந்திய சந்தையில் தரமற்ற மருந்துகள் புழங்குவதைத் தடுக்கும் வகையில், தரம் குறைந்த மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்தி உரிமத்தை உடனடியாக இடைநிறுத்தம் செய்வதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் 1945-ஆம் ஆண்டின் மருந்துகள் விதிகளில் முக்கியத் திருத்தங்களை மேற்கொள்ளப் பரிந்துரைத்துள்ளது. ஆய்வுகளின் போது குறிப்பிட்ட முக்கியத் தரக் அளவுகோல்களில் 'தரமற்றவை' எனக் கண்டறியப்படும் மருந்துகளின் தயாரிப்பு உரிமங்கள் இனி எவ்வித தாமதமுமின்றி உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்படும்.

தற்போது அமலில் உள்ள விதிகளின்படி, ஒரு நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை நிறுத்துவதற்கோ அல்லது ரத்து செய்வதற்கோ முன்னதாகக் காரணம் கேட்கும் நோட்டீஸ் வழங்குவது உள்ளிட்ட நீண்ட சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. ஆனால், புதிய திருத்தம் மூலம் கண்டறியப்பட்ட உடனே உடனடித் தடை விதிக்கப்படும். புதிய சட்டத்திருத்தத்தின்படி, தற்காலிகத் தடை விதிக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் உடனடியாகத் தடையை நீக்க முடியாது.

தயாரிப்பு நிறுவனம் இந்தத் தரக்குறைபாட்டிற்கான மூலக்காரணத்தைச் சரியாக ஆய்வு செய்து, உரியச் சீரமைப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை உரிம அதிகாரியின் திருப்திக்கு ஏற்ப முழுமையாகச் செயல்படுத்தி, அதனை அதிகாரி நேரில் ஆய்வு செய்து உறுதி செய்த பிறகே இடைநிறுத்த உத்தரவு ரத்து செய்யப்படும் என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வரைவுத் திருத்தங்கள் பொதுமக்களின் கலந்தாய்வுக்காகத் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பான ஆட்சேபனைகள் மற்றும் ஆக்கபூர்வமான பரிந்துரைகளைப் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்கள் 30 நாட்களுக்குள் அனுப்பி வைக்கலாம். 'துணைச் செயலாளர் (மருந்துகள்), சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்'. மின்னஞ்சல் முகவரி: drugsdiv-mohfw@gov.in

மத்திய அரசின் இந்தத் தீவிர நடவடிக்கையின் மூலம், சந்தைக்கு வரும் மருந்துகளின் தரம் கடுமையாகக் கண்காணிக்கப்படுவதோடு, மருந்து உற்பத்தியாளர்களின் பொறுப்புக்கூறலும் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.