உஷார்... ஆபாச செயலிகள் வடிவில் சைபர் மோசடி - மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!
ஆண்ட்ராய்டு வகை கைப்பேசைகளில் ஆபாச செயலிகள் மற்றும் போலியான ஆப்கள் வடிவில் ஊடுருவி, பயனர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மர்ம நபர்கள் திருடும் புதிய சைபர் மோசடி குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
"Night Play", "Reloop", "Kyss", "Vimo", "Rivo", "Nexo", "Vixa" உள்ளிட்ட பல ஆப்கள் பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் பயனர்களைத் தீங்கிழைக்கும் வலைதளங்களுக்கு அழைத்துச் சென்று, APK கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர்.
இந்தத் தீங்கிழைக்கும் செயலிகள் செல்போனின் திரையைப் படிப்பதுடன், பட்டன்களை அழுத்துவது, ஒருமுறை கடவுச்சொல்லைப் பெறுவது மற்றும் தானாகவே பணப் பரிமாற்றம் செய்வது போன்ற அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மோசடியாளர்களின் கைக்கு மாற்றிவிடுகின்றன. சில செயலிகள் வி.பி.என் உதவியுடன் இணையப் போக்குவரத்தைத் தங்களது சேவையகங்கள் வழியாகத் திசைதிருப்புவதுடன், அந்தச் செயலிகளைப் பயனர்கள் அழிக்கவிடாமலும் தடுக்கின்றன.
கூகுள் பிளே ஸ்டோர் அல்லது அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும், அறிமுகமில்லாத எந்தவொரு செயலிக்கும் 'அணுகல் அனுமதி' வழங்க வேண்டாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.