உஷார்... 2,000க்கும் மேற்பட்டோர் பாதிப்புடன் மருத்துவமனைகளில் குவிந்தனர்... சென்னையில் வேகமாகப் பரவும் காய்ச்சல்!
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகக் குவிந்து வருகின்றனர்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்டோருக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அடையாறு, அண்ணாநகர் மற்றும் வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு மற்ற இடங்களை விட அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 140 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்ப்ளூயன்சா ஏ , ரைனோ வைரஸ் மற்றும் ஆர்எஸ்வி உள்ளிட்ட பல்வேறு வைரஸ் தொற்றுகள் மக்களிடையே வேகமாகப் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சுயமாக மருந்துகளை உட்கொள்ளாமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாநகராட்சி தரப்பில் 3,700-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வீடு வீடாகச் சென்று தீவிரக் கொசு ஒழிப்பு மற்றும் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.