உஷார்... நாளை தீபாவளி தினத்தில் 27 மாவட்டங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை! 

 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா கடலோரப் பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் வளிமண்டலச் சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தின் 27 மாவட்டங்களில் நாளை பலத்த காற்றுடன் கூடிய கன மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில், 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 9: தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும்; நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட தென் மற்றும் மலை மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.

நவம்பர் 10 & 11: தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 10-ஆம் தேதி கனமழையும், டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் நீடிக்கும்.

நவம்பர் 12 & 13: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸையும் ஒட்டி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் வெளியே செல்வோர் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.