நடிகை ஆலியா பட் வீட்டில் மீண்டும் கல்யாண வைபோகம்! ஃபிட்னஸ் கோச்சை கரம்பிடிக்கும் ஷாகீன் பட்!
பாலிவுட் நட்சத்திர குடும்பமான பட் குடும்பத்தில் திருமண கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. நடிகை ஆலியா பட்டின் தங்கை ஷாகீன் பட், விரைவில் மணவாழ்க்கையில் இணைய உள்ளார்.ஷாகீன் பட் காதலித்து வரும் இஷான் மெஹ்ரா, ஒரு புகழ்பெற்ற ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஆவார். நீண்ட காலமாக நண்பர்களாக இருந்த இவர்கள், தற்போது தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இஷான் மெஹ்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஷாகீன் பட்டுடன் மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, இந்த மகிழ்ச்சியான செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஜோடிக்கு கரண் ஜோஹர், கரீனா கபூர் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.ஆலியா பட்டின் சகோதரி என்ற அடையாளத்தையும் தாண்டி, ஷாகீன் பட் ஒரு சிறந்த திரைக்கதை எழுத்தாளர் மற்றும் மனநல ஆர்வலர் ஆவார். 'Here Comes the Sun' என்ற மனநல விழிப்புணர்வு அமைப்பைத் தொடங்கி நடத்தி வரும் அவர், தனது மனநலப் போராட்டங்கள் குறித்துப் புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
ஏற்கனவே ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரைத் திருமணம் செய்துகொண்டு, தற்போது 'ராகா' என்ற 3 வயது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தற்போது ஆலியாவும் ரன்பீரும் மீண்டும் இணைந்து சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் அண்ட் வார்' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.சகோதரியைத் தொடர்ந்து ஷாகீன் பட்டும் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்திருப்பது பட் குடும்பத்தினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.