இன்று முதல் அனைத்து எக்ஸ்பிரஸ் இரயில்களும் எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் வழக்கம்போல் இயக்கம்!
சென்னை எழும்பூர் இரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் காரணமாகத் தாம்பரத்திற்கு மாற்றப்பட்டிருந்த அனைத்து எக்ஸ்பிரஸ் இரயில்களும் இன்று முதல் மீண்டும் எழும்பூரில் இருந்தே வழக்கம்போல் இயக்கப்படும் எனத் தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் அதிநவீன வசதிகள், புதிய வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் நோக்கில் ரூ.842 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளின் காரணமாகத் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சில எக்ஸ்பிரஸ் இரயில்கள் தற்காலிகமாகத் தாம்பரம் இரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன.
இரயில்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் அனைத்து எக்ஸ்பிரஸ் இரயில்களும் மீண்டும் எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்தே புறப்படும் மற்றும் வந்தடையும்.
அடுத்தகட்டப் பணிகள் தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகும் வரை இதே நடைமுறை தொடரும் எனத் தெற்கு இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.