தமிழகமே அதிர்ச்சி... கடலூரைத் தொடர்ந்து கோவையிலும் பரவும் பறவைக் காய்ச்சல்! 

 

கடலூரைத் தொடர்ந்து கோவையிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாநகரில் உயிரிழந்து கிடந்த நாரைகளின் மாதிரிகளைப் போபால் ஆய்வகத்திற்கு அனுப்பிப் பரிசோதித்ததில், அவை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இதையடுத்துத் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கோவை மாநகரில் சக்தி சாலையில் உள்ள ஆம்னி பஸ் நிலையம் அருகே 10-க்கும் மேற்பட்ட நாரைகள் உயிரிழந்து கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், சந்தேகத்தின் பேரில் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள், உயிரிழந்த நாரைகளின் மாதிரிகளைச் சேகரித்து மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஆய்வகத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், உயிரிழந்த நாரைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாகச் சுகாதாரத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பறவைக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தமிழக - கேரளா எல்லைச் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.