"நீட் வினாத்தாள் கசிவில் தொடர்புடைய அனைவரையுமே கைது பண்ணியாச்சு” - நிர்மலா சீதாராமன்
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் விவாதங்களும் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ள நிலையில், இக்குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசின் தீவிர நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்:
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது. இதில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்திருந்தால் மட்டுமே எதிர்க்கட்சிகள் நடத்துகின்ற போராட்டங்கள் நியாயமானதாக இருக்கும். இப்பிரச்சினை தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி மட்டத்திலேயே ஏற்கனவே தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை உறுதி செய்யப்படும் என நிதியமைச்சர் உறுதியளித்தார்.
"தங்களது சுயநலத்திற்காக நீட் வினாத்தாள்களை கசியவிட்டவர்கள், வாங்கியவர்கள் மற்றும் விற்றவர்கள் எனத் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடிய இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, விரைவு நீதிமன்றங்கள் மூலம் விரைவில் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.