பொங்கலுக்கான அனைத்து ரயில்களும் ‘ஹவுஸ் புல்’.. முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் தீர்ந்தது - பயணிகள் கடும் ஏமாற்றம்!

 

ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், அடுத்த 5 நிமிடங்களிலேயே அனைத்து ரயில்களும் விற்றுத் தீர்ந்தன. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து முக்கிய எக்ஸ்பிரஸ் ரயல்களும் முழுமையாக நிரம்பிவிட்டதால், சொந்த ஊர் செல்லத் திட்டமிட்டிருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

இந்திய ரயில்வே துறையின் 60 நாட்களுக்கு முன்பான முன்பதிவு விதிகளின்படி, பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ஆம் தேதிக்கான ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில வினாடிகளுக்குள்ளேயே லட்சக்கணக்கான பயணிகள் இணையதளம் மற்றும் கவுன்ட்டர்கள் மூலம் டிக்கெட் பெற முயன்றனர்.

சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபூரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து தென் மாவட்ட ரயல்களிலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி, 3ஏசி மற்றும் 2ஏசி வகுப்புகள் உட்பட அனைத்துப் பயணச்சீட்டுகளும் சில நிமிடங்களில் தீர்ந்து 'ரெக்ரெட்' நிலையை எட்டின. சென்னை - கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் 100-ஐக் கடந்து சென்றுள்ளது.

ஒரே நேரத்தில் டிக்கெட் புக் செய்ய முயன்றதால் பெரும்பாலான பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், பொங்கல் தினமான ஜனவரி 15-ம் தேதி பயணத்திற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளது. வழக்கம்போல கடுமையான கூட்ட நெரிசல் காணப்படும் என்பதால், பயணிகள் பலரும் சிறப்பு ரயில்களை விரைவில் இயக்க வேண்டும் எனத் கோரிக்கை விடுத்துள்ளனர்.