லஞ்சப் புகார் எதிரொலி... சோழிங்கநல்லூர் தவெக எம்.எல்.ஏ சரவணன் ராஜினாமா?! - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

 

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ சரவணன் மீது, கட்சிப் பொறுப்புகளை வழங்குவதற்கு லஞ்சம் பெற்று ஊழல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் தவெக கட்சிக்குள்ளும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அதிமுக, திமுகவைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் பலரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வரும் நிலையில், புதியதாகப் பதவியேற்றுள்ள தவெக சட்டமன்ற உறுப்பினர் மீதே இத்தகைய புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக கட்சியின் சோழிங்கநல்லூர் வட்ட துணைச் செயலாளராகப் பணியாற்றி வரும் வைதேகி என்பவர், எம்.எல்.ஏ சரவணன் மீது இப்புகாரை பகிரங்கமாக முன்வைத்துள்ளார். கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் எம்.எல்.ஏ சரவணன் லஞ்சம் பெற்று ஊழலில் ஈடுபட்டுள்ளதாக வைதேகி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இந்த முறைகேடுகள் குறித்து அவரிடம் நேரில் தட்டிக்கேட்ட போது, தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும், தவெக கட்சித் தலைமைக்கும் வைதேகி முறைப்படி ஆதாரங்களுடன் புகார் மனுக்களை அனுப்பியுள்ளார்.

சட்டமன்றத்தில் இன்று காலையில் தான் முதலமைச்சர் விஜய், "மக்கள் பணத்தைத் தொட்டவர்களை ஒருபோதும் விடமாட்டோம்; ஊழல் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும்" என ஆவேசமாக உரையாற்றியிருந்தார். அவர் பேசி முடித்த சில மணி நேரங்களிலேயே அவரது சொந்தக் கட்சி எம்.எல்.ஏ மீதே ஊழல் புகாரும், மிரட்டல் புகாரும் கிளம்பியுள்ளது கட்சித் தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

புகார் குறித்துக் கட்சித் தலைமை மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் முதலமைச்சர் விஜய் தனது கொள்கைப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்பதால், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது கட்சித் தலைமையால் நீக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.