யாருடன் கூட்டணி? தவெகவின் பலம் கூடுமா?! - இன்று அறிவிக்கிறார் டாக்டர் ராமதாஸ்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் பிஸியாக இருக்க, டாக்டர் ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற மர்மம் இன்று முடிவுக்கு வருகிறது.
பாமக-வின் எதிர்கால அரசியல் நகர்வு குறித்த முக்கிய அறிவிப்பை அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற பாமக இளைஞர் அணி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாமக செயல் தலைவர் காந்திமதி ராமதாஸ் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தேர்தல் களம் மும்முனைப் போட்டியாக மாறியுள்ள சூழலில், பாமக யாருடைய பக்கம் சாயும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
பாரம்பரியமாக அதிமுக-வுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வரும் பாமக, இந்த முறையும் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால் அன்புமணி அந்த கூட்டணியில் இடம் பெற்றிருப்பதால் யாருடன் இணைவார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றி கழகம், பாமக-வுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. வட மாவட்டங்களில் பாமக-வுக்கு இருக்கும் செல்வாக்கை விஜய் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும், இதனால் புதிய கூட்டணி அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை தொகுதி உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டால், பாமக தனித்துப் போட்டியிடவும் தயங்காது என்று அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர்.