கோவையில் ஒரு தொகுதியை ஒதுக்குங்க... அண்ணாமலை பிடிவாதம் - பாஜக மேலிடம் திணறல்!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ல் நடைபெற உள்ள நிலையில், பாஜக-வின் வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படாமல் இழுபறியிலேயே நீடிக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தேர்தல் நிலைப்பாடுதான். மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடைபெற்ற சமீபத்திய ஆலோசனையில், அண்ணாமலை தனது விருப்பத்தைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்:

"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கோவை மாவட்டத்தில் எனக்குச் சாதகமான ஒரு தொகுதியை ஒதுக்கினால் மட்டுமே நான் போட்டியிடுவேன். இல்லையென்றால், கட்சிப் பணிகளை மட்டும் கவனித்துக் கொள்கிறேன்" என அவர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

பாஜக மேலிடம் அவருக்குப் பாதுகாப்பான இடங்களாகக் கருதி முன்மொழிந்த மொடக்குறிச்சி மற்றும் ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளை அவர் ஏற்க மறுத்துவிட்டார். 2024 மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிட்ட கோவை மண்ணிலேயே சட்டமன்ற உறுப்பினராகவும் நுழைய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

கோவையில் பாஜக-விற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் கோவை வடக்கு மிக முக்கியமானது. ஆனால் இங்கு ஏற்கனவே சிட்டிங் எம்.எல்.ஏ-வாக உள்ள வானதி சீனிவாசன் மீண்டும் போட்டியிடத் தயாராகி வருகிறார். அண்ணாமலை இதே தொகுதியைக் கேட்பதால், யாருக்கு விட்டுக்கொடுப்பது என்பதில் டெல்லி தலைமைக்குச் சங்கடம் ஏற்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதி ஏற்கனவே வானதி வசம் இருந்த நிலையில், இப்போது தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அண்ணாமலைக்கான இடம் எது என்பதில் இழுபறி நீடிக்கிறது.

"வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் மட்டுமே களம் காண்பேன்" என்பதில் அண்ணாமலை உறுதியாக இருப்பதற்குக் காரணம், கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகள் தான். அரவக்குறிச்சி (2021) மற்றும் கோவை மக்களவை (2024) தேர்தல்களில் வெற்றியை நூலிழையில் தவறவிட்டதால், இந்த முறை சட்டமன்றத்திற்குள் நுழைவதை அவர் கௌரவப் பிரச்சினையாகப் பார்க்கிறார்.

அண்ணாமலையின் இந்தப் பிடிவாதத்தால், இன்று வெளியாக வேண்டிய பாஜக வேட்பாளர் பட்டியல் நாளைக்குத் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பியூஷ் கோயல் இது குறித்து டெல்லி மேலிடத்துடன் ஆலோசித்துத் இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.