"ஏற்கெனவே கிழிந்த கன்னித்திரை சந்தேகத்தின் பலனை அளிக்காது" - பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

 

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் நம்பகமானதாக இருக்கும் பட்சத்தில், மருத்துவப் பரிசோதனையில் அவரது 'கன்னித்திரை பழையதாகவோ அல்லது கிழிந்ததாகவோ' இருக்கிறது என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி, குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சந்தேகத்தின் பலனை வழங்கி விடுதலை செய்ய முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், "பாலியல் வன்கொடுமை என்பது ஒரு சட்டரீதியான சொல், அது மருத்துவரீதியான சொல் அல்ல" என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தால் கடந்த 1983-ஆம் ஆண்டு மே மாதம் ராகேஷ் என்பவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கடந்த 1982-ஆம் ஆண்டு நடைபெற்றது. தனக்கு விதிக்கப்பட்ட இந்த 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து ராகேஷ் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தான். இந்த நீண்ட கால வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் ராய் தலைமையிலான அமர்வு, ராகேஷின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, அவனுக்கான தண்டனையைத் தற்போது உறுதி செய்துள்ளது.

'Old Torn Hymen' Can't Give Benefit Of Doubt In Rape Case If Victim's Testimony Reliable: #AllahabadHighCourt Upholds 1983 Conviction | @ISparshUpadhyay https://t.co/3R35QIII2j

— Live Law (@LiveLawIndia) June 27, 2026


கடந்த 1982-ஆம் ஆண்டு, எழுதப் படிக்கத் தெரியாத 15 வயது சிறுமி ஒருவர், காலை சுமார் 9:30 மணியளவில் தனது கிராமத்தில் உள்ள கால்வாயின் மறுகரையில் இருக்கும் கச்சார் பகுதிக்கு இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது ராகேஷ் மற்றும் அவனது கூட்டாளி ஒருவன் சேர்ந்து, அச்சிறுமியை வழிமறித்துக் கொடூரமாக மாறி மாறி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். சிறுமி இதற்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய போது, அவ்விருவரும் சிறுமியை மிகக் கொடூரமாக அடித்துத் தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் வாய்மொழி சாட்சியம் மற்றும் அன்றைய தினமே எடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் (சிராய்ப்புகள், வீக்கங்கள் உள்ளிட்ட 6 காயங்கள்) அடிப்படையில் கீழ் நீதிமன்றம் இவர்களைக் குற்றவாளிகள் என அறிவித்தது.

உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணையின் போது, தண்டனை பெற்ற ராகேஷின் வழக்கறிஞர், மருத்துவ அறிக்கையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் கன்னித்திரை பழையதாகவும், கிழிந்ததாகவும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், இது அவர் ஏற்கனவே மற்றவர்களுடன் உடலுறவு கொள்ளப் பழகியவர் என்பதைக் காட்டுவதாகவும் வாதாடினார். எனவே, தனது கட்சிக்காரர் இவரை வன்புணர்வு செய்யவில்லை என வாதாடி, சந்தேகத்தின் பலனைத் தனக்கு வழங்குமாறு கோரினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குணநலனைத் தவறாகச் சித்தரிக்க முயன்ற இந்த வாதத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் வன்மையாக நிராகரித்தது. நீதிபதி சந்தோஷ் ராய் தனது தீர்ப்பில், விளையாட்டுகளில் பங்கேற்பது, மிதிவண்டி ஓட்டுதல், சீருடற்பயிற்சி, குதிரையேற்றம், கடினமான உடல் உழைப்பு அல்லது எதிர்பாராத விபத்துக் காயங்கள் போன்ற பல்வேறு வாழ்வியல் காரணங்களால் ஒரு பெண்ணின் கன்னித்திரை கிழியக்கூடும்.

சில பெண்கள் பிறக்கும் போதே துளை விழுந்த அல்லது கன்னித்திரை இல்லாமலேயே பிறக்கிறார்கள். வேறு சிலருக்கு அது அதிக மீள்தன்மையுடன் இருக்கிறது. எனவே, இந்த மருத்துவக் கண்டுபிடிப்புகள் எதுவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் நம்பகமான சாட்சியத்தை மீறிச் செல்ல முடியாது.

பாலியல் வன்கொடுமைகள் பொதுவாக யாரும் இல்லாத மிக ரகசியமான சூழலிலேயே நிகழ்த்தப்படுகின்றன. இதனால், இத்தகைய வழக்குகளில் நேரில் கண்ட சாட்சிகளை நடைமுறையில் கண்டறிவது சாத்தியமற்றது. எனவே பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலமே முதன்மையானது.

இவ்வழக்கில் நீண்ட காலமாக ஜாமீனில் இருந்து வந்த குற்றவாளி ராகேஷின் ஜாமீன் பத்திரங்களை உயர் நீதிமன்றம் உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அவனுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையின் மீதமுள்ள காலத்தை அனுபவிப்பதற்காக, அடுத்த 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் அவன் உடனடியாகச் சரணடைய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.