அமர்நாத் யாத்திரை ஏப்.15 முதல் முன்பதிவு தொடக்கம்... 57 நாட்கள் தரிசனம் - பனி லிங்கத்தின் விசேஷம்!
இமயமலையின் மடியில் அமைந்துள்ள புனிதத்தலமான அமர்நாத் குகைக் கோவிலில், இயற்கையாகத் தோன்றும் பனி லிங்கத்தைத் தரிசிப்பதற்கான இந்த ஆண்டுக்கான யாத்திரை தேதியை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமர்நாத் யாத்திரை ஜூன் 3ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 28ம் தேதி நிறைவடைகிறது. இந்த ஆண்டு யாத்திரை மொத்தம் 57 நாட்கள் நடைபெறவுள்ளது.
அமர்நாத் யாத்திரைக்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் முன்கூட்டியே பதிவு செய்வது கட்டாயமாகும். வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது. பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
13 வயது முதல் 70 வயது வரை உள்ள ஆரோக்கியமான பக்தர்கள் மட்டுமே யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவர். யாத்திரை செல்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களிடம் இருந்து உடல் தகுதிச் சான்றிதழ் பெறுவது அவசியம். கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் கோவில் அமைந்துள்ளதால், ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் என்பதால் தகுந்த முன்னேற்பாடுகள் அவசியம்.
பயணிகளின் வசதிக்காகப் பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரண்டு பாதைகளிலும் விரிவான பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளை விட இந்த முறை கூடுதல் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.