நிமிடங்களில் டெலிவரி...  ரூ2800 கோடியில் அமேசானின் மெகா திட்டம்!

 

ஆன்லைன் வர்த்தக ஜாம்பவானான அமேசான் நிறுவனம், இந்தியாவில் தனது 'அமேசான் நவ்'  என்ற அதிவேக டெலிவரி சேவையை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 2,800 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் மட்டுமே உள்ள இந்தச் சேவை, விரைவில் சென்னை, கோவை உள்ளிட்ட 100 நகரங்களுக்குக் கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் மளிகைப் பொருட்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்தையும் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த அதிரடித் திட்டத்திற்காக இந்தியா முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட சிறிய டெலிவரி சேவை மையங்களை (Micro-fulfilment centres) அமைக்க அமேசான் முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மிக அருகில் இந்த மையங்கள் இருப்பதால், போக்குவரத்து நெரிசல்களைக் கடந்து மின்னல் வேகத்தில் பொருட்களை டெலிவரி செய்ய முடியும். மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் 16,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களுக்குப் பசுமையான காய்கறிகள் கிடைக்க உதவும்.

அமேசான் நிறுவனத்தின் இந்த மெகா முதலீடு, இந்தியாவில் பெருகி வரும் 'குயிக் காமர்ஸ்' சந்தையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெலிவரி வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், தனது ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுக்காகவும் இந்தத் தொகையை அமேசான் செலவிட உள்ளது. குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டெலிவரி முறையை இன்னும் எளிதாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற ஆன்லைன் நிறுவனங்களுக்குப் போட்டியாக அமேசான் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.