ஊமத்தங்காய் விற்பனை... அமேசான் உட்பட முன்னணி நிறுவனங்களின் உணவு உரிமம் ரத்து!
நச்சுத்தன்மை வாய்ந்த ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகளை உணவுப் பொருளாக ஆன்லைனில் விற்பனை செய்ததற்காக சில நிறுவனங்கள் சிக்கியுள்ளன. அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகிய முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களின் உணவு உரிமங்களை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது. பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊமத்தை என்பது மனித உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய கடுமையான நச்சுத்தன்மை கொண்ட ஒரு தாவரமாகும். மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகளின்படி, இது மனிதர்கள் உட்கொள்ள தகுதியற்றது. ஆனால், இந்த நிறுவனங்கள் தங்களின் தளங்களில் இந்த உரிம எண்களைப் பயன்படுத்தி விற்பனை செய்து வந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த விதிமீறல் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. நிறுவனங்களின் விளக்கங்கள் திருப்திகரமாக இல்லாததால் ஆணையர் கே. சீனிவாஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி ஆன்லைன் தளங்கள் செயல்படுவதை உறுதி செய்யச் சோதனைகள் தொடரும்.