ஆம்புலன்ஸை விபத்தில் காயமடைந்தவர்   மனைவியை  சுத்தம் செய்ய வைத்த ஊழியர்...  அதிர்ச்சி வீடியோ !  

 

மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில், விபத்தில் காயமடைந்த கணவரை மீட்க வந்த ஆம்புலன்ஸிலேயே அவரது மனைவியை வைத்து ரத்தக் கறைகளைச் சுத்தம் செய்ய வைத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாலையில் அடிபட்டுக் கிடந்த நபரை ஏற்றி வந்த ஆம்புலன்ஸில், அவரது உடலில் இருந்து வெளியேறிய ரத்தம் அங்கங்கே சிந்தி வாகனமே அசுத்தமாகக் காணப்பட்டது. இதைப் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அடிபட்டவருக்கு முதலுதவி செய்வதற்குப் பதிலாக, அவரது மனைவியிடமே துணியைக் கொடுத்து வாகனத்தைச் சுத்தப்படுத்தச் சொல்லி மிரட்டியுள்ளனர். கணவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தில் இருந்த அந்தப் பெண், வேறு வழியின்றி ஆம்புலன்ஸ் தரையைத் துடைக்கும் காட்சி காண்போரை நெஞ்சைப் பதற வைக்கிறது.

இந்த அத்துமீறலை அந்தப் பகுதியில் இருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட, அது தற்போது நாடு முழுவதும் பூகம்பமாக வெடித்துள்ளது. மருத்துவச் சேவை என்பது உயிரைக் காக்கும் புனிதமான பணி என்பதை மறந்து, ஒரு பெண்ணிடம் இத்தகைய இழிவான வேலையை வாங்கிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஒரு நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்தில், அந்தப் பெண்ணின் அவல நிலையைப் பயன்படுத்தி வேலை வாங்கிய ஊழியர்களின் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. விபத்து நடந்த இடத்தில் மனிதாபிமானம் இன்றி நடந்துகொண்ட இந்த ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கினர்.

விவகாரம் முற்றியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மருத்துவ உதவியாளர் ஆகிய இருவரையும் நிர்வாகம் அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பும் கேட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் போன்ற அவசரக்கால வாகனங்களைப் பராமரிக்கத் தனி ஊழியர்கள் உள்ள நிலையில், ஒரு பெண்ணைக் கட்டாயப்படுத்தியது சட்டப்படி குற்றம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மருத்துவத் துறையில் அரங்கேறிய இந்த அவமானகரமான சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது