ஈரானுக்கு தரைவழிப் பாதையை  திறந்த பாகிஸ்தான்...  அமெரிக்கா அதிர்ச்சி!  

 

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மோதல் முற்றியுள்ள நிலையில், பாகிஸ்தான் தற்போது ஈரானுக்கு ஆதரவாக 6 புதிய தரைவழிப் பாதைகளைத் திறந்துவிட்டுள்ளது. இந்தப் புதிய வழித்தடங்கள் மூலம் ஈரான் இனி ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் தங்கு தடையின்றி வர்த்தகம் செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த அதிரடி முடிவால் சர்வதேச அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, அமெரிக்கா கடும் ஆத்திரமடைந்துள்ளதாகத் தெரிகிறது.

ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து அந்நாட்டை முடக்க நினைக்கும் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் ராஜதந்திரத்தை இந்தத் தரைவழி அனுமதி முறியடிக்கும் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிபுணர் தெரிக் ஜே. கிராஸ்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானின் இந்தச் செயல் ஈரானின் பொருளாதார நெருக்கடியைக் குறைத்து, அந்த நாட்டுக்கு உலக நாடுகளுடன் புதிய வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையானது ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிடியைத் தளர்த்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. சீனா மற்றும் ரஷ்யாவுடன் ஈரான் நெருக்கமாவதை அமெரிக்கா விரும்பாத நிலையில், பாகிஸ்தான் அதற்குப் பாலமாகச் செயல்படுவது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் அமெரிக்கா இதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் மீது ஏதேனும் அதிரடி முடிவுகளை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் எழுந்துள்ளது.