சோகம்... அமெரிக்காவில் மினிவேன் கவிழ்ந்து இந்திய மாணவி பரிதாப பலி!

 

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் நவ்ய கடுசு, அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் தங்கி உயர்கல்வி பயின்று வந்தார். இத்தகைய சூழலில் நவ்ய கடுசு நேற்று தனது நெருங்கிய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இண்டியானா மாகாணத்தில் உள்ள லேக் கவுண்டி பகுதிக்கு ஒரு மினிவேனில் சுற்றுலா சென்றுள்ளார். அந்த வாகனத்தில் நவ்ய கடுசு உள்பட மொத்தம் 7 பேர் பயணம் செய்ததாகத் தெரிகிறது.

அவர்கள் சென்ற மினிவேன் கிரவுண்ட் பாண்ட் பகுதியில் உள்ள ஒரு பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று இவர்களது வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்தக் கடுமையான மோதலின் காரணமாக நிலைதடுமாறிய மினிவேன் நடுரோட்டிலேயே தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்திற்குள் இருந்த மாணவி நவ்ய கடுசு மற்றும் அவரது நண்பர்கள் 7 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர்.

விபத்து குறித்துத் தகவலறிந்த உள்ளூர் மீட்புக் குழுவினர் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிரச் சிகிச்சை அளித்தும் பலனின்றி இந்திய மாணவி நவ்ய கடுசு தற்பொழுது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் பலியான தனது மகளின் உடலைத் தாயகம் கொண்டு வர மத்திய அரசு உடனடியாக உதவ வேண்டும் என அவரது பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ள செய்தி இணையத்தில் பரவி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.