காகித ஆலையில் ரசாயன தொட்டி வெடித்து  9 பேர் பலி, 2 பேர் மாயம்! 

 

அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் காகித உற்பத்தி ஆலையில் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாகப் பெரிய வெடிவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. மரங்களை உடைத்து அவற்றில் இருந்து காகிதம் தயாரிக்கும் பணிகள் இந்த ஆலையில் வழக்கம்போல நடந்து வந்துள்ளன. இந்த வேலைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான ரசாயன தொட்டி ஒன்று திடீரென பயங்கரமாக வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தின் காரணமாகத் தொட்டியில் இருந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கேலன் ரசாயன கலவை ஆலை முழுவதும் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் அந்த நச்சுத் திரவத்தில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 தொழிலாளர்களைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆலையில் இருந்து வெளியேறிய ரசாயனம் அதிக நச்சுத் தன்மை கொண்டது என்பதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தீயணைப்பு வீரர்களுக்குப் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 8 பேர் பலத்த காயமடைந்து தகுந்த சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கி மாயமான மற்ற 2 நபர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தற்போது தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.