அமெரிக்காவில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 3,500 இந்தியர்கள் வெளியேற்றம்!

 

அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அங்கு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டறிந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. இதன் காரணமாக கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் விதிமுறைகளை மீறி தங்கியிருந்த 3,567 இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விபரம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதன்படி நடப்பு ஆண்டின் கடந்த 5 மாதங்களில் மட்டும் 1,076 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்றும், சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து நெருக்கமான தொடர்பில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் அதே வேளையில், தகுதியானவர்களின் சட்டப்பூர்வமான குடியேற்றம் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இரு நாடுகளும் மிகவும் உறுதியாக உள்ளன. மேலும் குடியேற்றம் மற்றும் இடமாற்றம் தொடர்பான புதிய நடைமுறைகள் குறித்து இருநாட்டு உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விவரித்துள்ளார்.