அமெரிக்காவில் பயங்கரம்... பீட்சா டெலிவரி செய்யச் சென்ற இந்திய இளைஞர் சுட்டுக்கொலை!

 

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில், நள்ளிரவில் பீட்சா டெலிவரி செய்யச் சென்ற 28 வயதான இந்திய இளைஞர் அன்ஷுல் குஞ்சா மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அமெரிக்காவில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, கூடுதல் வருமானத்திற்காக வார இறுதி நாட்களில் பகுதி நேரமாகப் பீட்சா டெலிவரி செய்யும் வேலையையும் செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று நள்ளிரவு 12.30 மணி அளவில், பிலடெல்பியாவில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்கு அன்ஷுல் பீட்சா டெலிவரி செய்யச் சென்றுள்ளார். அவர் ஆர்டர் செய்யப்பட்ட உணவை அங்குள்ள ஒரு வெற்று அடுக்குமாடி குடியிருப்பில் கொடுத்துவிட்டு வெளியே வந்த சில நொடிகளில், அங்குக் கருப்பு முகமூடி அணிந்து மறைந்திருந்த இரு மர்ம நபர்கள் அன்ஷுலை மிக நெருக்கமாக வழிமறித்து அவரது தலையில் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகம், அன்ஷுலின் மறைவிற்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, அவரது உடலை இந்தியாவிற்கு விரைந்து கொண்டு வரக் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அன்ஷுலிடம் இருந்து பணம் அல்லது பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை என்பதால், திட்டமிட்டே போலியான முகவரி கொடுத்து அவரை வரவழைத்து இந்த கொடூரக் கொலையைச் செய்துள்ளனர் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்க அமெரிக்கப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.