அமித்ஷா வருகை நேரத்தில் மெட்டா ஏஐ கண்ணாடியால் புகைப்படம் ... திருவண்ணாமலை கோயிலில் பரபரப்பு !
திருவண்ணாமலை அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை கேமரா பொருத்தப்பட்ட மெட்டா ஏஐ ரே பேன் கண்ணாடியைப் பயன்படுத்திப் புகைப்படம் எடுக்க முயன்றதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பவுனிஷ் மற்றும் மகேஷ் ஆகிய இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலுக்குள் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் தனிநபர் அந்தரங்கத்தைக் காப்பதற்காகவும் ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகளும் தடை உத்தரவுகளும் நடைமுறையில் உள்ளன.
நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி ரகசியமாகப் படம் பிடிக்க முயன்ற இவர்களது செயல் கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவர்கள் அணிந்திருந்த அந்தச் சிறப்புக் கண்ணாடியில் இருந்து திடீரென ஒளி வெளிச்சம் தோன்றியதைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் உஷாராகி அவர்களை மடக்கிப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஆக.8) அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தர உள்ள நிலையில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களிடையே கூடுதல் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
உச்சகட்டப் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள சூழலில் இதுபோன்ற நவீன சாதனங்களுடன் பக்தர்கள் சிக்கியுள்ளது அங்குள்ள அதிகாரிகளிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது.பிடிக்கப்பட்ட இளைஞர்களிடம் காவல்துறையினர் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் எந்த நோக்கத்திற்காக இந்தக் கண்ணாடியைப் பயன்படுத்தினார்கள் என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது