அம்மா உணவகங்களைச் சீரமைங்க...   முதலமைச்சர் விஜய் திடீர் உத்தரவு!

 

தமிழ்நாட்டில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசியைப் போக்கும் உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் தற்பொழுது புதிய உத்வேகத்தைப் பெறவுள்ளன. மாநிலம் முழுவதும் பரவலாகச் செயல்பட்டு வரும் இந்த உணவகங்களை முழுமையாகப் புதுப்பித்துச் சீரமைக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தற்பொழுது ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அண்மைக்காலமாக இந்த உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து முதலமைச்சரின் கவனத்திற்குப் புகார்கள் கொண்டு வரப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மூலமாக 237 உணவகங்களும் என மொத்தம் 620 அம்மா உணவகங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ஏழைகளின் உணவுத் தேவையை உணர்ந்த முதலமைச்சர், உரிய அரசுத் துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் அவசரக் கலந்தாலோசனை நடத்தினார். இந்த உயர் மட்டக் கூட்டத்தின் முடிவில், அனைத்து அம்மா உணவகங்களுக்கும் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சமையல் கூடங்களுக்குத் தேவையான நவீன உபகரணங்களை எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், தூய்மையான முறையில் சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளைத் தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார்.