அமோனியா வாயுக்கசிவு.. பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு - ஜார்கண்ட் பெண் தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கொடூர அமோனியா வாயுக்கசிவு விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் போராடி வந்த மேலும் ஒரு தொழிலாளி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்த நச்சு வாயு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
விபத்து நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றே நச்சு வாயுவை அதிகளவில் சுவாசித்ததால் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மேலும் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியோடு உயிருக்குப் போராடி வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ப்ரீத்தி தேவி (29) என்ற பெண் தொழிலாளி தற்பொழுது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று காலைதான் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 43 தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆவணச் சரிபார்ப்பிற்குப் பின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை விளக்கமளித்திருந்தது. அந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே தற்பொழுது பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் சக தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதிய பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் இன்றி இயங்கி, 14 ஏழைத் தொழிலாளர்களின் உயிரைப் பறித்துள்ள இந்த தனியார் இறால் பதப்படுத்தும் ஆலை நிர்வாகத்தின் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தொழிற்சங்கங்களும் தற்பொழுது கோரிக்கை விடுத்து வருகின்றன.