அமோனியம் வாயு கசிவு விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவு; உரிமையாளர் கைது!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று மதியம் நிகழ்ந்த கொடூர அமோனியா வாயு கசிவு விபத்தில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சைகளை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகத்திற்குத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இன்று மதியம் 12 மணியளவில் கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தனியார் இறால் ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட இந்த அமோனியா நச்சு வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. நச்சு வாயுவை நேரடியாகச் சுவாசித்ததால் நுரையீரல் மற்றும் உள் உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலாளர்களில் இதுவரை 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது.
விபத்தின் போது ஆலைக்குள் இருந்த சுமார் 60 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 64-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் மற்றும் வாய், மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாளை தனது பிறந்தநாள் வரவிருக்கும் சூழலில், இந்தத் தொழிற்சாலை விபத்து குறித்து அறிந்தவுடன் முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், போர்க்கால அடிப்படையில் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்:
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு எவ்வித தொய்வும் இன்றி உயர்தர, சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை வழங்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் குமார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை விபத்து நிலவரங்கள் குறித்து முதலமைச்சருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. இந்தக் கொடூர விபத்து குறித்து முழுமையாகப் புலனாய்வு செய்ய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது:
விபத்து எப்படி நிகழ்ந்தது, அங்கு முறையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்துத் தீவிரமாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யத் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையில் அவசர உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, பெரியபாளையம் போலீஸார் ஆலை நிர்வாகத்தின் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, தொழிற்சாலையின் உரிமையாளர் உட்பட இருவரை கைது செய்துள்ளனர். இன்று தர்மபுரியில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சோகத்தின் சுவடு மறைவதற்குள், வடதமிழகத்தில் 8 தொழிலாளர்களின் உயிரைப் பறித்துள்ள இந்த நச்சு வாயு கசிவுச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோக அலையையும் ஏற்படுத்தியுள்ளது.