சீட்டுக்கட்டைப் போல சரிந்து விழுந்த 18 மாடி கட்டிடம்... மீட்பு பணிகள் தீவிரம் - கென்யாவில் சோகம்!

 

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் 18 மாடிகளைக் கொண்ட பிரமாண்டமான அடுக்குமாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைரோபியின் கிழக்குப் பகுதியில் உள்ள, சோமாலிய மக்கள் அதிகம் வாழும் ஈஸ்ட்லீ (Eastleigh) வணிக வளாகப் பகுதியில் கடந்த ஓராண்டாக இந்த 18 மாடிக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகக் கட்டிடம் பயங்கர சத்தத்துடன் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது.

கட்டிடம் இடிந்த அந்த நேரத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் தொழுகைக்காக மசூதிக்குச் சென்றிருந்தனர். இதனால் சுமார் 66 தொழிலாளர்கள் நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர் தப்பினர். ஆனாலும், கட்டிடத்தின் அடித்தளத்தில் இருந்த கடைகளில் பணியாற்றியவர்கள் மற்றும் சில தொழிலாளர்கள் என மொத்தம் 7 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் ராட்சத இயந்திரங்களின் உதவியுடன் மீட்புப் பணியை முடுக்கிவிட்டனர்.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5 பேரின் நிலை என்ன என்று தெரியாததால், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளுக்குள் உயிருடன் இருக்கும் சிலரிடம் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

நைரோபியில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிக் கட்டடங்கள் கட்டப்படுவதாகவும், லஞ்சம் மற்றும் முறையற்ற அனுமதிகளே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம் என்றும் உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கென்ய பொதுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, அங்கு கடந்த சில ஆண்டுகளில் 86 கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த கென்ய உள்துறை அமைச்சர் கிப்சும்பா முர்கோமென் உத்தரவிட்டுள்ளார்.