விவாகரத்து கோரி கதறிய 18 வயது இளம்பெண் – தலிபானில் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பெண்களின் அவல நிலை!

 

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட 18 வயது பெண் ஒருவர், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி தலிபான் ஆளுநரிடம் முறையிட்ட சம்பவம், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் எந்த அளவிற்கு மறுக்கப்படுகின்றன என்பதை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர், தனது கணவர் பல மாதங்களாகத் தன்னை அடித்து உதைத்தும், பணம் கேட்டுத் துன்புறுத்தியும் வருவதாகக் குற்றம் சாட்டினார். முகத்தை முழுவதுமாக மூடியபடி தலிபான் ஆளுநர் அப்துல்லா சர்ஹாதியைச் சந்தித்த அந்தப் பெண், தனது கணவரிடம் இருந்து உடனடியாக விவாகரத்து பெற்றுத் தருமாறு கோரிக்கை வைத்தார்.

இஸ்லாமியச் சட்டத்தின் படி திருமணத்தின் போது கணவன் அளித்த பணத்தை மனைவி திருப்பித் தர வேண்டும். ஆனால், அந்த பெண்ணின் கணவரோ திருமணத்தின் போது கொடுத்த பணத்தை விட 4 மடங்கு அதிகமான பணத்தைக் கொடுத்தால் மட்டுமே விவாகரத்து தருவேன் என மிரட்டியுள்ளார். பெண்ணின் குடும்பத்தினர் அந்தத் தொகையைத் தர மறுத்த நிலையில், ஆளுநரோ விவாகரத்து வழங்க மறுத்து கணவருடன் சேர்ந்து வாழும்படி அறிவுறுத்தினார். கணவனிடம் "பெண்ணை அடிக்கக் கூடாது, தனி அறை தர வேண்டும்" எனக் கூறி வழக்கை முடிக்க முயன்றார்.

விவாகரத்து முடிவில் உறுதியாக இருந்த அந்தப் பெண்ணைப் பார்த்து, "பெண்கள் சிந்திக்கும் திறன் இல்லாதவர்கள்" என்று ஆளுநர் இழிவுபடுத்தியதாகவும், அங்கிருந்த தலிபான் அதிகாரிகள் அதைக்கண்டு எள்ளி நகையாடியதாகவும் கூறப்படுகிறது.

2021-ல் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து ஆப்கானிஸ்தானில் பெண்களின் அடிப்படை உரிமைகள் கடுமையாகப் பறிக்கப்பட்டுள்ளன: பெண்கள் மேல்நிலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் இருந்து பெண்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் பொது இடங்களுக்குச் செல்லக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அவர்களின் பொது வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.