சென்னையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்... ரிப்பன் மாளிகையில் தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை!
Mar 15, 2026, 19:50 IST
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் வகையில், நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ஜெ. குமரகுருபரன் தலைமையில், சென்னை ரிப்பன் மாளிகையில் நாளை காலை 11:00 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே அமலுக்கு வந்துள்ள நன்னடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் எவ்வாறெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கப்படவுள்ளது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளின் பட்டியல் மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்துக் கட்சிகளிடம் கருத்துக்கள் கேட்கப்படும். பொது இடங்கள் மற்றும் அரசுச் சுவர்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றுவது குறித்த காலக்கெடு விதிக்கப்படும்.