நடுக்கடலில்  இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஆளில்லா விமானம்.. பிண்ணனியில் ஈரான்..?

 

இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரான் நாட்டுக்கு சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் இஸ்ரேலுக்குச் சொந்தமான கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் பயங்கர போர் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேலில் 1400 பேரும் காசாவில் 11000 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போர் காரணமாக மேற்கு ஆசிய பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் இஸ்ரேலைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவருக்கு சொந்தமான கன்டெய்னர் கப்பல் மீது சமீபத்தில் ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மால்டா கொடியுடன் சர்வதேச கடற்பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்த போது முக்கோண வடிவிலான குண்டுகளை சுமந்துச் செல்லும் 'ஷாஹெட்- 136' ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் கப்பல் சேதமடைந்தது; அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் நிலைமையை தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பதாக நம்புவதாக தெரிவித்தனர். மேலும் அதற்கான காரணத்தை அதிகாரி விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.