மாஞ்சா நூலில் சிக்கி, உயர் அழுத்த மின்கம்பியில் 4 நாட்களாக தலைகீழாகத் தொங்கிய கழுகு பத்திரமாக மீட்பு!
பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய மாஞ்சா நூலில் 4 நாட்களாகத் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த கழுகு ஒன்றை, மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் வனத்துறையினர் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா சாலையில் உள்ள வீவர்ஸ் காலனி பகுதியில் உயர் அழுத்த மின்கம்பியில் மாஞ்சா நூல் சிக்கியிருந்தது. அதில் கழுகு ஒன்று சிக்கி, 4 நாட்களாகத் தலைகீழாகத் தொங்கியபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
உணவு மற்றும் தண்ணீரின்றி கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த கழுகை கண்ட அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், பெஸ்காம் மின்வாரிய ஊழியர்களின் உதவியுடன் அப்பகுதியில் மின்சாரத்தைத் துண்டித்தனர். அதன்பின் பாதுகாப்பான முறையில் கழுகை மீட்டனர். மீட்கப்பட்ட கழுகுக்கு தற்போது கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.