எரியும் சிதையில் விழுந்து முதியவர் பலி.. தந்தை என தெரியாமலேயே எரியூட்டிய மகன்!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமுழியம் கிராமத்தில், இறந்தவரின் உடலை எரியூட்டும் போது நிலைதடுமாறி சிதைக்குள் விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், குமுழியம் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் (55) என்பவர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலை நேற்று முன் தினம் இரவு மயானத்தில் எரியூட்டும் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணியில் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு (65) மற்றும் அவரது உறவினர்கள் ஈடுப்பட்டனர்.
அரியலூரில் முன் தினம் பெய்த மழையினால் சிதையில் இருந்த நெருப்புச் சரியாக எரியாமல் அணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை ராமதாஸின் உறவினர்கள் மயானத்திற்குச் சென்றபோது உடல் முழுமையாக எரியாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே தங்கராசுவின் மகன் சக்திவேல் மற்றும் உறவினர்கள் மீண்டும் மண்ணெண்ணெய் ஊற்றி உடலை முழுமையாக எரியூட்டினர்.
உடல் எரிந்து முடிந்த பிறகுதான், முதல் நாள் எரியூட்டும் பணியில் இருந்த தங்கராசுவை காணவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் சிதையின் சாம்பலை விலக்கிப் பார்த்த போது, அங்கு இரண்டு மண்டை ஓடுகள் மற்றும் கூடுதல் எலும்புகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் அதிர்ந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இரும்புலிகுறிச்சி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இரவு பிணத்தை எரியூட்டும் போது தங்கராசு மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது அப்போது அவர் நிலைதடுமாறி எரியும் சிதையின் மீது விழுந்திருக்கலாம் என்றும், போதையில் இருந்ததால் அவரால் எழ முடியாமல் அங்கேயே உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அவரது மகன் சக்திவேல், சிதைக்குள் தனது தந்தை இருப்பது தெரியாமலேயே மீண்டும் தீ மூட்டியது சோகத்தின் உச்சமாக அமைந்துள்ளது. இது குறித்து இரும்புலிகுறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவர் ஒருவர் எரியும் சிதைக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.