ஐபிஎல்-இல் ஒரு சகாப்தம் நிறைவு.. சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ஃபிளெமிங் திடீர் விலகல்!

 

ஐபிஎல் வரலாற்றின் மிக வெற்றிகரமான மற்றும் நீண்டகாலக் கூட்டணியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அதன் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் இடையேயான 17 ஆண்டுகாலப் பயணம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இருதரப்பு பரஸ்பர ஒப்புதலுடன் ஃபிளெமிங் தனது பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக ஸ்டீபன் ஃபிளெமிங் தனது பயணத்தைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, 2009-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற அவர், கேப்டன் எம்.எஸ்.தோனியுடன் இணைந்து ஐபிஎல் தொடரின் அசைக்க முடியாத பலத்த கூட்டணியாக உருவெடுத்தார்.

2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணி ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தது. உலகளாவிய டி20 அணிகள் பங்கேற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் சிஎஸ்கே அணிக்கு 2 முறை கோப்பைகளை வென்று தந்துள்ளார்.

தனது இந்த திடீர் பிரியாவிடை குறித்து நியூசிலாந்தின் முன்னாள் கேப்டனான ஸ்டீபன் ஃபிளெமிங் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான செய்தியில், "சென்னை சூப்பர் கிங்ஸ் குடும்பத்துடன் கடந்த 17 ஆண்டுகளாகப் பயணித்தது என் வாழ்வின் மிக உன்னதமான மற்றும் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். அணியின் உரிமையாளர்கள், நிர்வாகம், வீரர்கள் மற்றும் உலகின் மிகச்சிறந்த ரசிகர்களான சென்னை ரசிகர்களுடன் எனக்குக் கிடைத்த இந்த அற்புதம் வாய்ந்த நினைவுகள் எப்போதும் என் நெஞ்சில் நிலைத்திருக்கும்."

சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் ஃபிளெமிங் இடையே எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் இன்றி, புதிய மாற்றங்களுக்கு வழிவிடும் நோக்கில் இந்த முடிவு பரஸ்பரம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியை மிக நீண்டகாலம் வழிநடத்திய ஒரே பயிற்சியாளர் என்ற பெருமையுடன் விடைபெறும் ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்குப் பதிலாக, சென்னை அணியின் அடுத்த புதிய பயிற்சியாளராக யார் பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு தற்பொழுது உலகெங்கும் உள்ள சிஎஸ்கே ரசிகர்களிடையே எழுந்துள்ளது.