100 கோடியில் ஒரு நிகழ்வு... நடுக்கடலில் எதிரெதிரே இரு கப்பல்களில் கேப்டன்களாக சந்தித்துக் கொண்ட தந்தை மகன்!
பரந்த நடுக்கடலில் எந்தவிதப் போக்குவரத்து சிக்னல்களும் இல்லாத சூழலில், வெவ்வேறு கப்பல்களில் கேப்டன்களாகப் பணியாற்றும் தந்தையும் மகனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட அபூர்வ நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையைத் தளமாகக் கொண்டு வணிகக் கப்பலில் கேப்டனாகப் பணிபுரிந்து வரும் ருஷீல் சரண், வட அட்லாண்டிக் பெருங்கடலில் வடக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிரே தெற்கு திசையிலிருந்து வந்த மற்றொரு பிரம்மாண்ட கப்பலை கடல்சார் வரைபடம் மூலம் அவர் சோதித்தபோது, அதில் கேப்டனாகப் பணிபுரிவது அவரது தந்தை ரவிராஜ் என்பது தெரிய வந்தது.
இரு கப்பல்களும் மிக அருகில் கடந்து சென்றபோது, தந்தையும் மகனும் தங்கள் கப்பல்களின் டெக் பகுதிக்கு வந்து கைகளை அசைத்துத் தங்களது மகிழ்ச்சியைப் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர்.
இந்த அரிய தருணத்தை வீடியோவாகப் பதிவு செய்த மகன் ருஷீல் சரண், "நூறு கோடியில் ஒரு வாய்ப்பு என் அப்பாவையும் என்னையும் நடுக்கடலில் இணைத்துள்ளது" என இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு அவரது தந்தை ரவிராஜ், "இரு வேறு திசைகளில் நமது கப்பல்கள் சென்றாலும், ஒரே கடல் வாழ்க்கையைத்தான் நாம் பகிர்ந்து கொள்கிறோம். என் மகன் இன்று சக கேப்டனாக வளர்ந்து நிற்பதைக் காண்பதில் பெருமிதம் கொள்கிறேன்" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் நடந்த இந்தச் சந்திப்பு பலரையும் நெகிழச் செய்துள்ளது.