தமிழகத்திற்கே முன்னுதாரணம்... அரசு அலுவலகங்களில் ரொக்கப் பணப் பரிவர்த்தனைக்குக் புதிய கட்டுப்பாடு - குமரி கலெக்டர் சுற்றரிக்கை!
அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது கணக்கில் வராத பணம் சிக்குவதைத் தடுக்கும் வகையிலும், வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கும் வகையிலும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் வெளியிட்டிருக்கும் புதிய சுற்றறிக்கை தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரசு அலுவலகங்களில் நடக்கும் சோதனைகளில் சிக்கிய கணக்கில் வராத பணம் குறித்துப் பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக நீதிமன்றம் முன்னதாகவே கேள்வி எழுப்பியிருந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள், தாங்கள் அலுவலகத்திற்கு எவ்வளவு பணம் கொண்டு வருகிறார்கள் என்பதைப் 'பர்சனல் ரிஜிஸ்டர் கேஷ்' என்ற பிரத்யேகப் பதிவேட்டில் தினமும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த விதியைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர் அந்தப் பதிவேட்டைத் தினமும் முறைப்படி பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வேலை நேரத்தின் போது அதிகப்படியான ரொக்கப் பணத்தை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்தச் சுற்றறிக்கையில் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஊழலைத் தடுத்து அலுவலகப் பணிகளில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, தமிழ்நாட்டின் மற்ற மாவட்ட நிர்வாகங்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளதுடன் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.