ஒரு மணி நேர நெருக்கடியும், ஜானகியின் கண்ணீரும்.. "மாதா உன் கோவிலில்" பாடல் உருவான நெகிழ்ச்சிப் பின்னணி!

 

இன்றைய நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஏதும் இல்லாத 70, 80-களின் காலகட்டத்தில், இசையமைப்பாளர்களும் பாடகர்களும் தங்களின் திறமையாலும் அர்ப்பணிப்பாலும் மட்டுமே காவியங்களை உருவாக்கினர். அதற்கு மிகச்சிறந்த சான்றுதான், 1978-ல் காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளியான 'அச்சாணி' திரைப்படத்தில் இடம்பெற்ற "மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்" என்ற பாடல். பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மாவையே பாடலின் போது கண்ணீர் சிந்த வைத்த அந்தப் பாடலின் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை ஒளிந்துள்ளது.

'அச்சாணி' திரைப்படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜா வாங்கிய மொத்த சம்பளம் வெறும் 8,000 ரூபாய் மட்டுமே. இத்திரைப்படத்தின் பாடல்களை 'ஸ்டீரியோ ரெக்கார்டிங்' முறையில் பதிவு செய்ய முதலில் அருணாச்சலா ஸ்டூடியோ ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அங்கு ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பாடல்களைப் பதிவு செய்ய முடியாமல் போனது.

இதனைத் தொடர்ந்து, மாற்று ஏற்பாடாகப் பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவின் இசைக்குழுவிற்கு ஒரே ஒரு மணிநேரம் மட்டுமே அவகாசம் ஒதுக்கப்பட்டது. அந்த மிகக் குறுகிய ஒரு மணிநேரத்திற்குள் இரண்டு பாடல்களைப் பதிவு செய்ய வேண்டிய கடும் நெருக்கடிக்கு இளையராஜா தள்ளப்பட்டார்.

திட்டமிட்டபடி முதல் பாடலான "தாலாட்டு பிள்ளையுண்டு தாலாட்டு" என்ற பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா ஆகியோரின் குரல்களில் மிகவேகமாகப் பதிவு செய்து முடித்து அனுப்பிவிட்டார் இளையராஜா.  அடுத்ததாக, எஸ். ஜானகியின் குரலில் "மாதா உன் கோவிலில்" பாடலைப் பதிவு செய்யத் தொடங்கினர். கையில் நேரம் மிகக் குறைவாக இருந்ததால், அடுத்தடுத்து ஏற்பட்ட சில சிறிய இடையூறுகளால் இளையராஜா தன் இசைக்குழுவினர் மீது கடும் கோபத்தில் இருந்தார். ஸ்டூடியோவுக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்ட அந்தச் சமயத்தில், பாடகி எஸ். ஜானகி மைக் முன்னால் நின்று தனியாக அழுது கொண்டிருப்பதை இசைக்குழுவினர் கவனித்து இளையராஜாவிடம் கூறினர்.

பதறிப்போன இளையராஜா, உடனே அவரிடம் சென்று விசாரித்த போது தான் உண்மை தெரிய வந்தது. இளையராஜாவின் கோபத்தால் ஜானகி அழவில்லை; மாறாக, அந்தப் பாடலின் வரிகளும், இளையராஜா அமைத்திருந்த உருக்கமான மெட்டும் தந்த உணர்ச்சிப் பெருக்கால், பாடத் தொடங்கும் போதே தமக்குத் தானாக அழுகை வந்துவிட்டதாகவும், அதை அடக்க முடியாமல் தவிப்பதாகவும் கூறி ஜானகி அம்மா சிறிது அவகாசம் கேட்டுள்ளார்.

பாடலின் ஜீவனையும், ஜானகி அம்மாவின் உணர்வையும் புரிந்துகொண்ட இளையராஜா, அவரைத் தேற்றி ஆசுவாசப்படுத்தி, மீண்டும் பாட வைத்தார். அப்படி அந்த ஒற்றை மணிநேரக் கெடுபிடி மற்றும் நெருக்கடிக்குள், ஜானகி அம்மா தன் ஆன்மாவை உருகிப் பாடிப் பதிவு செய்த பாடல் தான் இன்று வரை கேட்போரின் மனங்களைக் கரைய வைக்கும் "மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்" திருப்பாடல்.

பாடல் வெளியாகிப் பல தசாப்தங்களைக் கடந்தும், இன்றும் இப்பாடல் பலரின் ப்ளேலிஸ்ட்டில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது என்றால், அதற்கு அன்றைய திரைக்கலைஞர்களின் திறமையும், தொழிலின் மீது அவர்கள் கொண்டிருந்த அர்ப்பணிப்புமே முக்கியக் காரணமாகும்.