புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைது... தவெக அரசின் மீது ரூ.120 கோடி ஊழல் புகார் - மாரிதாஸ்!
தவெக அரசுக்கு எதிராகப் புதிய ஊழல் புகார் ஒன்றை முன்வைத்து அரசியல் புயலைக் கிளப்பியுள்ளார் பிரபல யூடியூபரும், பாஜக ஆதரவாளருமான மாரிதாஸ். இது தொடர்பாக மாரிதாஸ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தவெக அரசின் முதலாவது மெகா ஊழல் இதுதான் எனக் குறிப்பிட்டு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.
தவெக அரசின் கீழ் மாவட்ட வாரியாக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நியமனங்களில் தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தின் நேரடி உத்தரவின் பேரில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டாகச் சேர்ந்து மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர் பணியிடங்களை விலைக்குக் கொடுக்க நேரடியாகவே தவெக நிர்வாகிகள் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளதாகவும், இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் சுமார் ரூ.120 கோடி வரை சட்டவிரோதமாகப் பணம் சுருட்டப்பட்டுள்ளதாகவும் மாரிதாஸ் சாடியுள்ளார்.
அமைச்சரையும் தவெக தலைமையையும் நேரடியாக விமரிசித்துள்ள மாரிதாஸ், தனது பதிவில், "அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் 100% ஊழல் நடந்துள்ளது உறுதி. வசூலிக்கப்பட்ட இந்த கோடிக்கணக்கான ரூபாயில், மாவட்டச் செயலாளர்கள் தங்களது பங்கைப் பிரித்துக் கொண்டது போக, எவ்வளவு தொகையைத் தவெக தலைமைக்கும், அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கும் அனுப்பி வைத்தார்கள் என்பது தற்போதைக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த விவகாரம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை வசம் வழக்குச் சென்றால், போதிய ஆதாரங்களுடன் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மிக விரைவில் கைதாவது உறுதி" என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் தவெக அரசின் பெண் அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சென்னை சைபர் கிரைம் போலீசாரால் மாரிதாஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தவெக-வின் முக்கியத் தூணாகக் கருதப்படும் புஸ்ஸி ஆனந்தைக் குறிவைத்து அவர் வெளியிட்டுள்ள இந்த 'ரூ.120 கோடி வழக்கறிஞர் நியமன ஊழல்' பதிவு தவெக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே 'ஒட்டக பேரம்', 'ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கு' எனப் போர்க்களமாக இருக்கும் தமிழக அரசியலில், மாரிதாஸின் இந்த சிபிஐ மிரட்டல் பதிவு தவெக - பாஜக இடையே புதிய மோதலை உருவாக்கியுள்ளது.