அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு நோட்டீஸ்!

 

தங்கள் மீது அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தரப்பில் 'ஜூனியர் விகடன்' இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் உட்பட 12 பேருக்கு வழக்கறிஞர் மூலம் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 23 அன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் "ரூ.1,000 கோடி முறைகேடு?" "சிக்கிய அன்பில்..." என்ற தலைப்பில் வெளியான அட்டைப்படக் கட்டுரை மற்றும் அவதூறான சித்திரங்கள் தங்களது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.டி. அரசகுமார் மீதான வழக்கில் அன்பில் மகேஸுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், மத்திய குற்றப்பிரிவு எஃப்.ஐ.ஆரில் கூட அவரது பெயர் இடம்பெறவில்லை என்றும் நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், எந்தவித அடிப்படை விளக்கமும் பெறாமல் உள்நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையதளத்திலுள்ள அவதூறுக் கட்டுரையை 48 மணி நேரத்திற்குள் நீக்கிவிட்டு, பத்திரிகை விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், முக்கிய நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட 48 மணி நேரத்திற்குள் இதற்கு உடன்படாவிட்டால் தகுந்த குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகள் தொடரப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.