தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக ரூ.100 கோடி மோசடி புகார்! அன்பில் மகேஸ் நாளை ஆஜராக உத்தரவு
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம், அனுமதிகள் பெற்றுத்தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக எழுந்துள்ள ரூ.100 கோடி மோசடி புகார் தொடர்பான வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.இந்த வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளை தரம் உயர்த்துதல், கட்டிட அனுமதி உள்ளிட்ட அரசு ஒப்புதல்களை பெற்றுத்தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்குள்ளான பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 177 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள வீடுகள் உள்ளிட்ட அவருடன் தொடர்புடைய பல இடங்களில் செப்டம்பர் 16-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் சில டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சோதனையைத் தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் செப்டம்பர் 18-ம் தேதி நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அன்பில் மகேஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவரிடம் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் தொடர்பான புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அன்பில் மகேஷ் மறுத்துள்ளதுடன், போலீஸ் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.